திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.49 திருக்குறுக்கை
ஆதியிற் பிரம னார்தாம்
    அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர்
    உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச்
    சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
1
நீற்றினை நிறையப் பூசி
    நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும்
    அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று
    தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
2
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
    தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
    கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
    பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
3
சிலந்தியும் ஆனைக் காவிற்
    திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே
    கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ்
    சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
4
ஏறுடன் ஏழ டர்த்தான்
    எண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறடைச் சடையி னானை
    அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய
    மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
5
கல்லினால் எறித்து கஞ்சி
    தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே
    நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகை ஏந்தி
    எழில்திகழ் நட்ட மாடிக்
கொல்லியாம் பண்ணு கந்தார்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
6
காப்பதோர் வில்லும் அம்புங்
    கையதோர் இறைச்சிப் பாரந்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத்
    தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக்
    குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
7
நிறைமறைக் காடு தன்னில்
    நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச்
    சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும்
    நீண்டவா னுலக மெல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
8
அணங்குமை பாக மாக
    அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும்
    மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து
    காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
9
எடுத்தனன் எழிற் கயிலை
    இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற
    அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந ரம்பால்
    வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.50 திருக்குறுக்கை
நெடியமால் பிரம னோடு
    நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார்
    அருச்சுனற் கம்பும் வில்லுந்
துடியுடை வேட ராகித்
    தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
1
ஆத்தமாம் அயனு மாலும்
    அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று
    தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மிமுன்
    சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார்
    குறுக்கைவீ ரட்ட னாரே.
2
இப்பதிகத்தில் மூன்றாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
3
இப்பதிகத்தில் நான்காம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com